Saturday, June 2, 2012

திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்

(தில்லையில் அருளியது - கலிவிருத்தம்) 


ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் 
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே.

தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே.

திருச்சிற்றம்பலம் 

யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்

(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம் ) 

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை 
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே.

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே.

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே.

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே.

பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.

சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே.

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே.

திருச்சிற்றம்பலம் 

எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை

(தில்லையில் அருளியது - ஆசிரிய விருத்தம்) 

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.

உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே.

என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.

காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே.

பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே.

திருச்சிற்றம்பலம்