Saturday, December 12, 2009

பிரதோஷம்

    மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. நம்மை பற்றவிருந்த பாவங்களெல்லாம் ஈசனிடம் உறையும் வேளை. உயிர்பிழைத்த தேவ, அசுரர்கள் இசை வாத்தியமுழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க பரம்பொருள்க்கு நன்றி தெரிவித்த வேளை. இசையாற் பரவசமடைந்த ஈசன் நடேசனாக நர்த்தனமாடிய வேளை. இவ்வாறு கயிலையிற் சகல தேவ, அசுரர்கள் யாவரும் இன்னல் தீர்த்தமை யெண்ணியும் ஆனந்த தாண்டவத்தை கண்டும் மெய்மறந்து சிவனாரைப் பூசித்தப்படியிருக்கும் அத்தகைய சிறப்பிற்குரியதும், சித்தர் பெருமக்களால் சிவவழிபாடுகளில் தலையாயதெனப் போற்றப்படும் பிரதோஷ வழிபாட்டு தோன்றலின் கரணியத்தை யிங்கு காண்போம்.




சிவனார் பேருள்ளம்


    தாயானவள் சேய் செய்யும் பிழையினை கணபொழுதில் மறந்து மன்னிக்கும் குணமுடையராக யிருத்தலியல்பு. தாயுமானாவரோ சகலரர்க்கும் மூலமாதலால் தன் பக்தர்கள் அறிந்தோ, அறியாமலோ, ஆணவமருளினாலோ செய்யுந் தவறினைப் பொருத்து, மன்னித்தருளுவதில் நிகரில்லாதவர். அதனாலன்றோ தாயினுஞ் சாலபரிந்தென்று இறைஞ்சுகிறார் மாணிக்கவாசகர்.

    சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. அசுரர்களும், தேவர்களும் பகைவராயினுங் சிவவழிபாட்டினாலே மங்கா புகழ் எய்துள்ளனர். இதை வலியுறுத்துவனவாகக் கூறப்படும் பக்திநெறிக் கதைகளுளொன்று வேடுவர் கண்ணப்பரின் கதை.

    வேட்டையாடிய விலங்கின் புலாலை முதலில் தான் சுவைத்துப் பார்த்து, பின் சுவைமிகு துண்டுகளை மட்டும் படையலாக சிவலிங்க ஆவுடையிற் மீது பரப்பியபிறகு எஞ்சியத் துண்டுகளைக் கொண்டு தன் பசியாற்றுவான் கண்ணப்பன். பசுங் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்குங் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னை யர்பணித்தக் கொண்டவராக திகழ்ந்தார் பூசர்.

    சாத்திரங் கற்ற பூசரும், வேடுவரும் அடிப்படையிற் இருவேறு துருவங்களையாயினுங் தத்தம் பக்தியில் மெய்யன்புக் கொண்டவர்கள். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட பூசருக்கும், செய்வதறியாமற் செய்யுங் கண்ணப்பனுக்கும் இடையே பக்திப் போரே மூண்டது. பக்திப்போர் முடிவுக்கு வர அருளுள்ளங் கொண்ட சிவனார், பூசரின் கனவிற் தோன்றி, இன்றிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார்.

    சிவனார் திருக்கண்ணிற் குருதி தென்பட்டமாத்திரமே, சிவன் கண்ணில் புண், கண்டுங் காணாமற் யிருக்கலாகுமோ யெனக் கூறி, அம்பின் கூர்முனையாற் தன்கண்ணைக் குற்றிப் பெயர்த்தெடுத்து புண்கண்ணில் பொருத்தினான் கண்ணப்பன். உனக்கின்றி எனக்கேன் யிருக்கண் யென்று மொழிந்தான். மறைந்திருந்த பூசரோ கண்டது கனவோ நனவோயென யறியாமற் திகைத்து நின்றார். இடக்கண்ணி்ற் நிற்கவே வலக்கண்ணி்ற் வழியாரம்பித்தது குருதி. சற்றுஞ் சிந்தியாது வலக்காலை புண்கண்ணிற் மிதியவே, அம்பினாற் வலக்கண்ணேப் பெயர்க்க துணியவே, சிவனார் கண்ணப்பனைத் தடுத்தருளினார்.

    எச்சிலிட்ட புலால் படைத்தல், செருப்பணிக் காலால் மீதித்தல் முதலியன தீச்செயலையாயினுந் தன்னிரு கண்ணையும் பெயர்த்தெடுத்து உறுப்புதானம் செய்திட்ட, இருப்பதனை யிழக்க முனைந்திட்ட துணிவே மெய்பக்தி யென ஏற்றுக்கொண்டு கண்ணப்பரை ஆட்கொண்டுருளினார் சிவனார்.




பாற்கடற் கடையக் கரணியம்


    மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன் தேவேந்திரன் வரையிலாக அனைவரும் சிவவழிபாடினாலே மங்கா புகழ் எய்துள்ளனர். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை யிழந்த இந்திரன், தேவகுருவின் ஆலோசனையின்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம், பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்க திட்டமிட்டான். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென யறிந்த தேவேந்திரன், தனது குல எதிரியென்றும் பாராமற் அசுர பலத்தையும் நாடினான். பாற்கடலை கடையத் துணைப்புரிவதாற் என்றும் மரணயெய்யா நிலைதர வல்ல அமிழ்தத்தில் தனக்கொர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள். பாற்கடலில் பள்ளிகொணடருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்ததையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார்.





பாற்கடற் கடைதல்


    வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தர மலையை மத்தாக்கி, மலை கடலிலமிழா வண்ணம் கூர்மவதார கடவுள் தாங்கியபடி, தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டனர். ஆனால் மலைமத்தோ அசைவேணாவென்று அடம்பிடித்தது. இன்னும் பலவான்கள் தேவையெனயறிந்த இந்திரன், இராவணினிடமே மல்யுத்தம் செய்த சக்திசாலிகளாகிய ஆயிரங்கரங்களையுடைய கார்த்தவீரியார்ஜுனன் மற்றும் வானர வேந்தன் வாலியின் உதவியை நாடினான். அசுரர்களுடன் கார்த்தவீரியார்ஜுனன் பாம்பின் தலையினருகே சேர, தேவர்களுடன் வாலி பாம்பின் வாலினருகே சேர்ந்து மந்தர மலையை அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கடலை இனிதே கடைய யாரம்பித்தனர்.





தேவ அசுர ஆவல்


  1. தீராப் பகையரும் சாவா வரங்கிடைக்குமென ஒன்றுக்கூடி உழைக்கச் செய்ததந்த ஆவல்.
  2. குணத்தாற் மாறுபட்டோரும் வயதேறா மேனிபெற ஒருமித்த எண்ணங் கொடுத்ததந்த ஆவல்.
  3. நா இதுகாருமுணரா சுவையென கொண்டாடி நிற்கசெய்ததந்த ஆவல்.
  4. முக்கனியுந் தேனுஞ் சர்க்கரையுடஞ் சேர்த்துப் பிசைந்தப் பழச்சாறும் வீணெனக் கூறச்செய்ததந்த ஆவல்.
  5. உடற்கூறுபடினும் உயிரெனுஞ் சீவன் உடனுறைய காந்தத்தினைத் தரவல்லவெனப் போற்றச் செய்ததந்த ஆவல்.
  6. அமிழ்தத்தினை அருந்தியவர் உலகயின்பமனைத்தும் சுவைத்தவரென பெருமைக் கொள்ளச் செய்ததந்த ஆவல்.
  7. இவையன்றி பெறுவதற்கு வேறு பேறில்லையென மருளச் செய்ததந்த ஆவல்.





ஆலகாலத் தோன்றல்


    சாகானிலை தரவல்ல அமிழ்ததின்பாற் கொண்டபற்றினாற் கடைவதை தீவிரபடுத்த, அமிழ்த்தின் வரவை எதிர்நோக்கிட்ட வேளையிற், அவர்க்கெல்லாம் பேரிடியாக கருகருவென விரீயத்துடந் வானலாவ திரண்டு நின்றது ஆலகாலம் எனுந்விடமே. இக்கொடியவிடத்திற் மேலுந் வலுசேர்த்தாற் போல் வாசுகி வலிபொருக்க முடியாமற் நஞ்சினை கக்கியது. கிணறு வெட்ட பூதம் கிழம்பினாற் போல், சற்றும் எதிர்பாராமற் தலைப்பட்ட பேராபத்தினால், சித்தம் கலங்கிட, சிந்தை தடுமாறிட, மரணஓலம் கேட்டிட, கை காலெல்லாம் உதறிட, செய்வதறியாமற் பாலகர் போல் தன்னிலை யெண்ணி மனந்நொந்து கண்ணீர் மல்கினர்.

    மரணப்பயங் கொண்ட நெஞ்சினுள் சங்கரன் நினைவு இருளைக் கிழித்துத் தென்படுந் ஒளியினைப் போல்லெழ,சதாசிவா!!! சங்கரா!!! அபயமென அலறி, பாற்கடலினிருந்து கயிலைநாதனின் திருவடியிற் தஞ்சம் புக கயிலைமலைக்கு விரைந்தனர். ஆலகாலமோ இவர்கள் செல்லும் வழிநெடுக்க தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோமென மரணோலத்துடன் நந்தியம்பதியின் இருப்பிடத்திற்கு வந்தனர். விடயமறிந்த நந்தியோ அபயமருள பரம்பொருளின் கடைக்கண்பட அவ்வனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். சேதியறிந்து திகைத்தனர் அங்கிருந்தோர். எப்பணி தொடங்கினும் சிவனருளைப் பெறுந் அந்நெறியினை மறந்த கரணித்தினாலேயே இவ்வபாயத்தில் சிக்கிவிட்டோமென பரம்பொருளின் திருவடியில் சரணடைந்தனர் ஓடிவந்தோர்.





தீவினைத் தீர்த்தல்


    மறுமொழியேதுங் கூறாமற் நாடிவந்தோர் உயிர்காக்க அபயந் தந்தருள மனமிறங்கினார் ஒப்பாரும் மிக்காருமில்லா சிவபெருமான். இந்நிலையில் கடைந்தோரின் உயிரைக்கவர காலனாக கயிலைக்கே வந்தது அவ்வாலகாலம். நெறிமறந்தாற் துன்பம் அவர்தம் செய்வினையாயினுந், தவறை யொப்புக்கொண்டு சரணடைந்தோர் இன்னல் போக்க, சித்தர்கள் கூடியிருக்குமந்த கயிலைமலையில், சிவகணங்கள் அஞ்சிய “அவ்விடத்தை, இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக!!!” யெனச் சுந்தரரை நோக்கி திருவாய் மொழிந்தார் விரிசடைப் பெருமான். பாரில்வுள்ளோர் பயந்து நடுங்கிய விடத்தினை ஒன்றுத்திரட்டி உருண்டையாக்கிட சுந்தரர், “நமச்சிவாய!!! நமச்சிவாய!!! நமச்சிவாய!!!” வென முன்மொழிய, அவையிலிருந்தோர் அதனை வழிமொழிய, அண்ட சராசரங்களும் இறைவனின் அத்திருநாமத்தையே உச்சரித்தவனவாக ஒருமித்த சிந்தனையிற் ஒடுங்க, அக்கொடியவிடமானது வடிவஞ் சிறுத்து உருண்டையானது.

    பிரளயக் காலத்து அக்னியினைப் போன்ற வீரியமிகு விடத்தினை தன்னிருக் கரங்களால் ஏந்திய ஈசன் அவையோரை நோக்க, “ஐயனே!!! ஆலகாலத்திலிருந்து எங்களைக் காக்க உகந்த வழி செய்க” வென தேவ அசுரரனைவரும் வேண்டினர், நடப்பன யெண்ணி மலைமகள் பதற, அவள் தமையனார் தோள் நடுங்க, அடியவர்கட்கு அடியவராம் சிவனார் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தினை வாயிற்யிட்டு விழுங்கலானார்.

    அம்மாசறுகோனின் அருளை காணுங்கால் பயங்கொண்டவராகத் திகைத்து நின்ற உமையும், பரந்தாமனும், எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.

    இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுர படைசுல அபயந்தேடி ஒன்றாகக் கூடியிருக்கின்ற வேளையிற் நாமும் கோயினுளிருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலாமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துப் போகுமென்பது உறுதி.





பிரதோஷக் காலம்


    இச்சம்பவந் நடக்கின்ற காலநேரத்தே பிரதோஷ காலமென்றனர். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.





பிரதோஷ வகைகள்


  1. நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை
  2. பக்ஷப் பிரதோஷம் - சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை
  3. மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பக்ஷ திரயோதசி
  4. மகாப் பிரதோஷம் - சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி
  5. பிரளயப் பிரதோஷம் - ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம்





திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்


  1. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
  2. பழங்கள் - விளைச்சல் பெருகும்
  3. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
  4. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
  5. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
  6. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
  7. எண்ணெய் - சுகவாழ்வு
  8. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
  9. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  10. தயிர் - பல வளமும் உண்டாகும்
  11. நெய் - முக்தி பேறு கிட்டும்



-- நன்றி தமிழ்ச்சொக்கன்,விக்கிபீடியா.