Saturday, June 2, 2012

திருவெண்பா - அணைந்தோர் தன்மை

(திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா) 

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் 

பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து.

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து.

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையும் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்
பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து.

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.

யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை.

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து.

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.

திருச்சிற்றம்பலம்