Friday, January 1, 2010

திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல்

(திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே.

மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே.

அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே.

வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே.

வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதினிற்
பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசளி வார்எம் பிரானாவாரே.

வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே.

நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்திலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே.

பூவலர் கொன்றையும் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணாற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே.

தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே.

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவரந்நதுவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே.

திருச்சிற்றம்பலம்