(திருப்பெருந்துறையில் அருளியது - கலிவிருத்தம்)
பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என்
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா
செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே.
நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்
தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே.
எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச்
சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே.
வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என் தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே.
பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கூற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே.
கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே.
வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே.
கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே.
எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே.
வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே.
திருச்சிற்றம்பலம்