Friday, January 1, 2010

திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்


(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ.

நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.

கள்வன் கடியன் கலதியிவன் என்னாத
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

திருச்சிற்றம்பலம்