Friday, January 1, 2010

திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்

(திருக்கழுக்குன்றத்தில் அருளியது - ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும்
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

திருச்சிற்றம்பலம்