Friday, January 1, 2010

திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல்

(தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ.

நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான்
மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ.

பண்பட்ட தில்லைப் பதிfக்காசைப் பரவாதே
எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்
புணப்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ.

தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே
நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ.

எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரத்தவா பூவல்லி கொய்யாமோ.

வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
குறிசெயது கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிபட பூவல்லி கொய்யாமோ.

பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ.

பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன்
ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ.

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப்
பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ.

அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்
பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ.

மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ.

திருச்சிற்றம்பலம்